கரூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
வைகாசி திருவிழாவை முன்னிட்டு கரூர் மாரியம்மன் கோவிலில் நேற்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி திருவிழா
கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த 14-ந்தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
19-ந்தேதி பூச்சொரிதல் விழாவும், 21-ந்தேதி காப்பு கட்டுதலும், 29-ந்தேதி தேரோட்டமும் நடைபெற்றது. 28, 29, 30, 31-ந்தேதிகளில் மாவிளக்கும், பால்குடமும், 29, 30-ந்தேதிகளில் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தும் விழாவும் நடைபெற்றது.
சாமி திருவீதி உலா
கடந்த 21-ந்தேதியில் இருந்து தினமும் ரிஷப, புலி, பூத, வெள்ளி சிம்ம, வெள்ளி அன்ன, சேஷ, யானை, குதிரை, காமதேனு, கெஜலட்சுமி, புஷ்பவிமானம், கருட, மயில், கிளி, வேப்பமர, பின்னமர உள்ளிட்ட வாகனங்களில் சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 31-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அன்றிரவு ஆற்றில் வாணவேடிக்கையும் நடந்தது. கடந்த 8-ந்தேதி பஞ்ச பிரகாரமும், 9-ந்தேதி புஷ்ப பல்லக்கும் நடைபெற்றது.
ஊஞ்சல் உற்சவம்
வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று கரூர் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்மன் குடிபுகுதல் விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.