உலகின் கேம் சேஞ்ஜராக சுவாமி நித்யானந்தா இருக்கிறார் ரஞ்சிதா சொல்கிறார்...!

உலகத்தின் 'கேம்சேஞ்சர்' நித்யானந்தா; நான் யார் என்கிற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், நீங்கள் வரவேண்டிய இடம் கைலாசா என ரஞ்சிதா கூறி உள்ளார்.;

Update:2023-07-28 15:24 IST

சென்னை

நித்யானந்தாவைத் தொடர்ந்து தற்போது ரஞ்சிதாவும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கி உள்ளார்.

ரஞ்சிதா, கைலாசா சார்பில் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசி உள்ளார். அவ்வாறு அவர் பேசிய வீடியோக்கள் யூ-டியூப்பில் வைரலாகி வருகிறது.

கைலாசா என்றால் என்ன? என்பது பற்றியும், நித்யானந்தா பற்றியும் அவர் பேசிய பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ரஞ்சிதா பேசியதாவது:-

கைலாசம் பரமசிவம் பக்கம் நிற்கிறது. இந்துத்துவத்தின் புனிதத்தை ஒரு நெட்வொர்க்காக இணைக்கிறது கைலாசா.

பூஜைகள், யோகா, சந்யாசம் உள்ளிட்ட அனைத்து இந்து நெறிமுறைகளையும் கைலாசா கற்றுத் தருகிறது. இது அசைக்க முடியாத அடித்தளத்தை கொண்டது.

கைலாசா எப்போதும் தர்மாவின் பக்கம் நிற்கும், அதில் எந்த சமரசமும் செய்யாது. வேறு எந்த மிரட்டலுக்கும், சமரசத்திற்கும் கைலாசாவில் இடமில்லை.

இந்த உலகம் இரு முக்கிய மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒன்று ஏ.ஐ.டெக்னாலஜி (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்)-செயற்கை நுண்ணறிவு, மற்றொன்று சி.ஐ.(காஸ்மிக் இன்டெலிஜென்ஸ்)-அண்ட நுண்ணறிவு, அது தான் கைலாசா.

இந்த உலகின் கேம் சேஞ்ஜராக சுவாமி நித்யானந்தா இருக்கிறார். கைலாசா, முதல் இந்து தேசம். இன்று இந்துக்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் நாடுகளில் இந்துக்களுக்கான தேவைகள் கிடைப்பதில்லை. ஆனால், கைலாசாவில் வசிக்கும் இந்துக்களுக்கு முறையான தேவைகள் கிடைக்கிறது.

நான் யார் என்கிற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், நீங்கள் வரவேண்டிய இடம் தான் கைலாசா. கைலாசாவில் எல்லாமே இலவசம். கல்வி இலவசமாக கிடைக்கிறது. சுவாமி நித்யானந்தர் அதில் உறுதியாக இருக்கிறார்.

விலங்குகளை கொலை செய்வதை அங்கு அனுமதிப்பதில்லை. அதனால் அசைவங்களுக்கு அனுமதியில்லை. சுவாமிஜியின் கடந்த 40 ஆண்டு கால  வாழ்க்கையில், தர்மத்தின் பக்கம் அவர் நின்றிருக்கிறார்.

தொடர்ந்து தர்மத்தின் பக்கம் அவர் நிற்பார். காசி, மதுரை மீனாட்சி போன்ற புனிதமான இந்துக்களின் வரலாற்றை, இந்துக்களின் நினைவில் கொண்டு சேர்ப்பதும், போற்றி பாதுகாப்பதும் தான் சுவாமி நித்யானந்தாவின் பணி.

2009-ல் சுவாமி நித்யானந்தரை சந்தித்தேன். அவர் பார்த்ததும் புன்னகைத்தார். அவர் அனைவரிடமும் பேசினார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவராக இருந்தார். பணம், பொருள் சம்பாதிக்கும் எந்த எண்ணமும், நோக்கமும் அங்கு இல்லை.

பெண்கள் முன்னேற்றத்தில் கைலாசா எப்போதும் முன்னுரிமை தருகிறது. உலக நாடுகளின் கலந்தாய்வுகளில் தன்னுடைய பிரதிநிதியாக பெண்களை தான் கைலாசா அனுப்புகிறது. மற்ற எந்த நாடுகளும் இதை செய்வதில்லை.

பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்று நித்யானந்தர் அறிவித்தார். ஆனால் இன்று கைலாசாவின் பொறுப்புகளில் 98 சதவீதம் பெண்கள், தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள்.

சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவை கைலாசாவில் இருப்பதாக அங்கு வசிக்கும் பெண்கள் கூறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்