தேயிலை செடிகளை அகற்றும் பணி நிறுத்தி வைப்பு
கூடலூர் டேன்டீயில் வனத்துறைக்கு ஒப்படைத்த இடங்களில் தேயிலை செடிகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், வனத்துறையினர் தற்காலிகமாக பணியை நிறுத்தி வைத்தனர்.;
கூடலூர்,
கூடலூர் டேன்டீயில் வனத்துறைக்கு ஒப்படைத்த இடங்களில் தேயிலை செடிகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், வனத்துறையினர் தற்காலிகமாக பணியை நிறுத்தி வைத்தனர்.
வனத்துறையிடம் ஒப்படைப்பு
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்காக நீலகிரி, வால்பாறை பகுதியில் வனப்பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழகம்(டேன்டீ) தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும், நடுவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதிளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் டேன்டீ தொடர் நஷ்டம் அடைவதாக கூறப்படுகிறது.
மேலும் டேன்டீ தோட்டங்களின் ஒரு பகுதி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. கூடலூர் பாண்டியாறு டேன்டீயில் ஏற்கனவே 650 ஏக்கர் பரப்பளவு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் உள்ள தோட்டங்கள் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட இடத்தில் வளர்ந்துள்ள தேயிலை செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் வனத்துறையினர் அகற்றும் பணியை தொடங்கினர்.
தற்காலிகமாக நிறுத்தம்
இதை அறிந்த தோட்ட தொழிலாளர்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் விரைந்து வந்து வனத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பணியை தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வன அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் தேயிலை செடிகளை அகற்றும் பணியை தற்காலிகமாக வனத்துறையினர் நிறுத்தி வைத்தனர்.
இதுகுறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறும்போது, பல ஆண்டுகளாக பராமரித்து வந்த தேயிலை செடிகளை அகற்றி விட்டு காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவாக மரங்களை நட திட்டமிட்டுள்ளனர். இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் தேயிலை தோட்டங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நாளடைவில் வனத்துறையினரிடம் டேன்டீ ஒப்படைக்கப்பட்டு, அனைத்து தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.