2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திடீர் பணியிடை நீக்கம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓய்வு பெறும் நாளில் 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓய்வு பெறும் நாளில் 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
உத்தரவு
தமிழகத்தில் கடந்த 31-ந் தேதி 60 வயது நிறைவடைந்த ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் ஓய்வு பெற்றுள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓய்வு பெறும் நாளில் கடந்த 31-ந்தேதி ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாண்டி மற்றும் நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாவித்ரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவினை மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் பிறப்பித்து உள்ளார். ஓய்வு பெறும் நாளில் மேற்கண்ட 2 ஆணையாளர்களான வட்டார வளர்ச்சி அலுவலர்களும் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது அரசு ஊழியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை நீக்கி சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு அதன் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மேற்கண்ட பணியிடை நீக்க நடவடிக்கைக்கு அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
இதுகுறித்து உயர்அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை மற்றும் குற்ற வழக்குகள் இருந்தால் மேற்கண்ட அரசாணை பொருந்தாது.
அதன்படி மேற்கண்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர் மீதும் லஞ்சஒழிப்பு புகார் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு கூறினார்.