குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தம்
திருப்பத்தூரில் குற்ற செயல்களை தடுக்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
கண்காணிப்பு கேமராக்கள்
திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு, புதுப்பேட்டை ரோடு பகுதிகளில் தனியார் பங்களிப்புடன் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமை வகித்தார். ஐ.எப்.பி.டபிள்யூ.டி. தொண்டு நிறுவன தலைவர் டாக்டர் அருண் குமார் வரவேற்றார். வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மற்றும் திருப்பத்தூர் -புதுப்பேட்டை ரோடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 6 கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எப்.எக்ஸ். நிறுவன தலைவர் மரிய பெலிக்ஸ் என்கிற மதியழகன், இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்- இன்ஸ்பெக்டர் அகிலன், டாக்டர் ஹேமலதா, அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கலட்சுமி, ஜெயபாரதி, சிக்சிக்மா அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நகர் முழுவதும்
திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்ட பிறகு திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. நவீன காலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் மூன்றாவது கண் கண்காணிப்பு கேமராதான். தற்போது திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. விரைவில் நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் இருந்து கண்காணிக்கப்படும்.
திருப்பத்தூரில் விரைவில் சாலை பணிகள் முடிந்தவுடன் சிக்னல் அமைக்கப்படும். நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணியால் இரும்பு கம்பிகள் மூலம் தடுக்கப்பட்டுள்ளதால் டவுன் போலீஸ் நிலையம் அருகே உள்ள இணைப்பு சாலையில் தற்போது போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் தொடர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.