பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 1,040 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

குமரி மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 88.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 1,040 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

Update: 2022-11-01 22:27 GMT

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 88.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 1,040 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது. குறிப்பாக மலையோர மற்றும் நீர்நிலை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் கோதையாறு, வள்ளியாறு, பழையாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கோழிப்போர்விளையில் 88.4 மி.மீ. பதிவு

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 88.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தக்கலையில் 82.2 மி.மீட்டர் பதிவானது.

மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மி.மீ. வருமாறு:-

பூதப்பாண்டி- 15.4, சிற்றார் 1- 15.4, சிற்றார் 2- 54.6, களியல்- 7, கொட்டாரம்- 15.6, கன்னிமார்- 7, குழித்துறை- 3, மயிலாடி- 7.4, நாகர்கோவில்- 20, பெருஞ்சாணி- 47, பேச்சிப்பாறை- 27, புத்தன்அணை- 44.8, குளச்சல்- 46.4, சுருளோடு- 30.4, இரணியல்- 63, பாலமோர்- 11.2, மாம்பழத்துறையாறு- 15, திற்பரப்பு- 7.8, அடையாமடை- 51.2, குருந்தன்கோடு- 23, முள்ளங்கினாவிளை- 32.8, ஆனைக்கிடங்கு- 16, முக்கடல் அணை- 5.9 என பதிவாகி இருந்தது.

வெள்ள அபாய எச்சரிக்கை

மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 604 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 550 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 566 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,040 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி வருவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. அருவியில் நேற்று 5-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

சிற்றாறு பட்டணம் கால்வாய் கரை இடிந்தது

தொடர் மழை காரணமாக குலசேகரம் அருகே காவல்ஸ்தலம் பகுதியில் சிற்றாறு பட்டணம் கால்வாய் கரையோரப் பகுதி நேற்று முன்தினம் இடிந்து கால்வாயில் விழுந்தது. இதனால் இச்சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்பகுதி மக்கள் சாலையில் தடுப்புகள் வைத்து உள்ளனர். இந்நிலையில் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்