விராலிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி விழாவையொட்டி விராலிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-30 18:30 GMT

முருகன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது விராலிமலை முருகன் கோவிலாகும். இங்கு மலை மேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்து வருகிறார். மேலும் இத்தலத்தில் முருகன் அருணகிரிநாதருக்கு காட்சியளித்து அவருக்கு அஷ்டமா சித்திகளை வழங்கி திருப்புகழ் பாட வைத்த தலமாகவும், நாரதருக்கு பாவ விமோசனம் தந்த தலமாகவும் விளங்குகிறது.

இத்தனை சிறப்புமிக்க இத்தலத்தில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடைபெறும். அதன்படி இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கந்தசஷ்டி விழா

இதேேபால் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழாவானது கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மலை மேல் உள்ள முருக பெருமான் சமேத வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் நாகம், சிம்மம், பூதம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தார்.

சூரசம்ஹாரம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரபத்மனுக்கு பெருவாழ்வு அளித்தல் (சூரசம்ஹாரம்) நிகழ்ச்சியானது நேற்று மாலை நடைபெற்றது. அதனையொட்டி நேற்று காலை மலை மேல் உள்ள முருக பெருமானுக்கு தங்க கேடயம் சாற்றி சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனிடம் முருகன் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் சூரபத்மனுக்கு பெருவாழ்வு அளித்தல் (சூரசம்ஹாரம்) நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வாகனம், கொடியாக...

இதில் சூரபத்மனை முருக பெருமான் வதம் செய்யும்பொழுது சூரன் தனது சக்தியால் மரமாக மாறிவிடுவான். தொடர்ந்து மரமாக மாறிய சூரனை வதம் செய்யும்போது மரம் இரண்டாகப் பிளந்து ஒரு பகுதி சேவலாகவும், மற்றொரு பகுதி மயிலாகவும் மாறிவிடுவான்.

அதன் பிறகு முருகன் மயிலை தன் வாகனமாகவும், சேவலை கொடியாகவும் மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் விராலிமலை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று திருக்கல்யாணம்

தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) திருக்கல்யாணமும், நாளை (செவ்வாய்க்கிழமை) திருக்கல்யாண ஊர்வலமும், 2-ம் தேதி (புதன்கிழமை) பள்ளியறை ஏகாந்த சேவை நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி விழாவானது நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்