தமிழக அரசு மேல்முறையீட்டு மனுமீது 'யூ டியூப்' மாரிதாஸ் பதில் அளிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழக அரசு மேல்முறையீட்டு மனுமீது ‘யூ டியூப்’ மாரிதாஸ் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-12-03 02:52 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

'யூடியூப்' ஆர்வலர் மாரிதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும், முப்படைகளின் தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த விவகாரத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து தி.மு.க.வைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது எனவும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டு மாரிதாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கிளை, மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது எனக்கூறி, அவர் மீதான வழக்கை ரத்துசெய்து கடந்த ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.ஆர். ஷா, சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் சஞ்சய் ஹெக்டே ஆஜராகி, ஐகோர்ட்டு உத்தரவு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என வாதிட்டார்.

வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க மாரிதாசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 9-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்