பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலி: பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பதை உறுதி செய்ய போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலியாக பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வெடி தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுரை வழங்கினார்.;
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் நேற்று முன்தினம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்து அரியலூர், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதையடுத்து, அரியலூர் பட்டாசு ஆலை தீ விபத்து எதிரொலியாக கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை அருகே உள்ள ஜோதிவடம், தாந்தோணிமலை அருகே உள்ள பால்வார்பட்டி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் தனியார் வெடி தயாரிப்பு இடங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு உபகரணங்கள்
இந்த ஆய்வின்போது பட்டாசு மற்றும் வாண வெடிகள் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களை சேமித்து வைப்பதற்கு முறையான உரிமங்கள் பெறப்பட்டுள்ளனவா?, அவற்றின் இருப்பு எவ்வளவு வைக்கப்பட்டுள்ளது?, அதற்கான கோப்புகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா?, பாதுகாப்பு முறைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறதா? எனவும் ஆய்வுகளை மேற்கொண்டார்.
மேலும் வெடி பொருட்களை இருப்பு வைக்கும் இடங்கள் சுற்றிலும் முழுமையாக அடைத்து வைக்க வேண்டும். போதிய அளவிலான தீயணைப்பான்களை வைக்க வேண்டும். வேலை செய்யும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அளித்து அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் உரிமையாளர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுரை வழங்கினார்.