சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டும் - விவசாயிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-07-31 05:59 GMT

சென்னை,

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரத்தினையே அடி உரமாக பயன்படுத்துகிறார்கள். டிஏபி உரம் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை அகில உலக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்வதால், உள்நாட்டில் டிஏபி உர உற்பத்தி குறைந்து, பெரும்பாலான டிஏபி உரங்கள் வெளி நாட்டிலிருந்தே இறக்குமதி செய்து, விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இறக்குமதியின்போது சில நேரங்களில் கப்பல் பற்றாக்குறை அல்லது துறைமுகங்களில் இடநெருக்கடி போன்ற காரணங்களினால் டிஏபி உரத்தை துறைமுகத்தில் இறக்கி, மாவட்டங்களுக்கு அனுப்புவதில் சிலசமயம் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, இது தொடர்பாக, மத்திய அரசின் உரத்துறையானது, டிஏபி உரத்துக்கு மாற்றாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை அடி உரமாக இட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி வருகிறது.

அதன்படி, 9 கிலோ தழைச்சத்தும் 23 கிலோ மணிச்சத்தும் உள்ள 50 கிலோ டிஏபி உரத்திற்கு மாற்றாக, அடி உரமாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை மூன்று வழிகளில் பயன்படுத்தலாம். இதன்படி

* மூன்று மூட்டை (150 கிலோ) சூப்பர் பாஸ்பேட்டும், 20 கிலோ யூரியாவும்

* ஒரு மூட்டை (50 கிலோ) 20:20:0:13 காம்ப்ளக்ஸ்சும், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும்

* ஒரு மூட்டை (50 கிலோ) 16:20:0:13 காம்ப்ளக்ஸ்சும், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும்

பயிரின் வளர்ச்சிக்கு அவசியம் தேவைப்படும் கந்தகச்சத்து காம்ப்ளக்ஸ் உரத்தில் 13 சதமும் சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 11 சதமும் உள்ளதால், பயிரின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்கும். இதனால், டிஏபி இட்ட வயலைப் போன்றே, பயிர்வளர்ச்சி செழித்து, விளைச்சலும் அதிகரிக்கும். தற்போது, அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் காம்ப்ளெக்ஸ் உரமும், சூப்பர் பாஸ்பேட் உரமும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

எனவே, டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை நெல்லுக்கு அடியுரமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்