சுந்தரமூர்த்தி நாயனாா்- பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

ஆடி சுவாதி விழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனாா்- பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-07-25 18:45 GMT


ஆடி சுவாதி விழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனாா்- பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத தலங்கள்

பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் சர்வ தோஷ பரிகார தலமாகவும் பஞ்சபூதத் தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் விளங்குகிறது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடப்பது வழக்கம். விழாவில் சுந்தரமூர்த்தி நாயனாரும், பரவை நாச்சியாருக்கும் திருக்கல்யாணம் நடக்கும். விழாவில் திருவாரூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.

திருக்கல்யாணம்

இந்த ஆண்டுக்கான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 7 மணிக்கு நம்பி ஆரூராரை (சுந்தரர்) நிறைகுடம் கொடுத்து புதுத்தெரு சுந்தரா் நாலுகால் மண்டபத்தில் இருந்து அழைத்தலும், 8 மணிக்கு பரவை நாச்சியார் திருமாளிகையில் இருந்து புறப்படுதலும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பழங்கள், குங்குமம், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, இனிப்பு வகைகள், புஷ்பம், தாம்பூலம், ரவிக்கை துணி, வெற்றிலை, பாக்கு போன்ற சீர்வரிசை பொருட்களுடன் ராஜ துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலை அடைந்தனர். .

மாலை மாற்றும் நிகழ்ச்சி

தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட சடங்குகள் நடந்தன. மேலும் கோவில் வளாகத்தில் பரவை நாச்சியார், சுந்தரர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஹோமம் முடிவடைந்த பிறகு பரவை நாச்சியாருக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர் பரவை நாச்சியார், சுந்தரர் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

திருக்கல்யாணத்தை தொடர்ந்து மாலை நம்பி ஆரூரார் 63 நாயன்மார்களுடன் தேரோடும் வீதியில் நாதஸ்வர இசையுடன் வீதிஉலா நடந்தது. இன்று (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு நம்பி ஆரூரார் வெள்ளை யானையில் கைலாய வாத்தியங்களுடன் வீதிஉலா சென்று, கைலாயக்காட்சி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்