தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தற்கொலை தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. மனநல மருத்துவத்துறை தலைவர் வீரமுத்து தலைமை தாங்கினார். குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், யோகா மருத்துவர் சஞ்சய் காந்தி, டாக்டர்கள் லட்சுமணன், பிராபகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் கீதா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மருத்துவ கல்லூரி டீன் பாப்பாத்தி கலந்து கொண்டு கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு நிரந்தரமற்ற பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகாது என்ற முழக்கத்துடன் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து தற்கொலையில் இருந்து நம்மை பாதுகாப்பது குடும்பமா? சமூகமா? என்ற தலைப்பில் செவிலிய மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது. மேலும் கட்டுரை போட்டி, கவிதை போட்டி, மீம்ஸ், நாடகம் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக கல்லூரி முதல்வர் மரக்கன்றுகளை நட்டார்.