மாரண்டஅள்ளி :
மாரண்டஅள்ளியில் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த முருகன். இவருடைய மகள் தமிழ்ச்செல்வி (வயது 17). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரது தந்தை முருகன் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தமிழ்செல்விக்கு இருதய நோய் இருந்து வந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. தந்தை இறந்து விட்டதால் தாயார் வள்ளி பராமரிப்பில் வசித்து வந்த மாணவிக்கு மருத்துவ செலவுக்கு போதுமான பணம் இல்லை. இதனால் மாணவி சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் மாணவி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிதாப சாவு
பின்னர்மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் மாணவி சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.