தாய், தந்தையுடன் தொழிலாளி தற்கொலை

எலச்சிபாளையம் அருகே கடன் தொல்லையால் தாய், தந்தையுடன் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-06-06 18:45 GMT

திருச்செங்கோடு

தச்சு தொழிலாளி

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் வையப்பமலை அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது65). இவரது மனைவி சிந்தாமணி. இவர்களது மகன் நந்தகுமார் (36). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை.

நடேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் இடுப்பு மற்றும் 2 கால்களிலும் அடிபட்டு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்து வந்தார்.

எனவே நந்தகுமார் தச்சு தொழில் செய்து பெற்றோரின் மருத்துவ செலவையும், உணவு தேவைகளையும் கவனித்து வந்து உள்ளார். வறுமையின் காரணமாக செலவுகளை சமாளிக்க நந்தகுமார் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

3 பேர் தற்கொலை

இதேபோல மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்கள் கடன் வாங்கி உள்ளனர். இவ்வாறு பல இடங்களில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் மனம் உடைந்த நிலையில் அவர்கள் காணப்பட்டனர்.

நேற்று காலையில் நீண்டநேரம் ஆகியும் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தற்கொலை செய்து கொண்ட 3 பேரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

இதற்கிடையே 3 பேரும் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்து சிந்தாமணி எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதில் கணவர் நடேசன், மகன் நந்தகுமார் ஆகியோரின் உடல்நிலை பாதிப்பு காரணமாக அதிக அளவில் கடன் வாங்க வேண்டியதாகி விட்டது. மேலும் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும், கடன் வாங்கிய நிலையில் அதனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தங்களது மகன் ஜெயபிரகாஷ் புதைக்கப்பட்ட இடத்தில் எங்களது உடல்களையும் புதைக்க வேண்டும் எனவும் எழுதி இருந்தது.

இறந்து போன நடேசன், சிந்தாமணி தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்து உள்ளனர். இறந்து போன நந்தகுமார் மூத்த மகன் ஆவார். 2-வது மகன் ஜெயபிரகாஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்து உள்ளார். இதேபோல இவர்களது ஒரே மகள் சசிரேகா 10 ஆண்டுகளுக்கு முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது. கடைசி மகன் கோபி திண்டுக்கல்லில் தங்கி வேலை செய்து வருகிறார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவர்மன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடன் தொல்லையால் தாய்-தந்தையுடன் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வையப்பமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்