பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே கல்லூரி மாணவி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. விவசாயி. இவருடைய மகள் கிருத்திகா (வயது 19). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. (மயக்கவியல்) முதலாமாண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த 29-ந் தேதி கல்லூரியில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது பஸ்சில் வந்து கொண்டிருந்தபோது தனது தம்பியிடம் போனில் பேசிய கிருத்திகா தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என கூறினாராம்.
விசாரணை
இதையடுத்து வீட்டுக்கு சென்றதும் கிருத்திகா சோர்வடைந்த நிலையில் வாந்தி எடுத்து சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி கிருத்திகா இறந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவி கிருத்திகா விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.