அரூர்:
அரூர் அருகே ராணுவ வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூக்கில் பெண் பிணம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எருக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி குமுதா (வயது 37). இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் குமுதா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரியில் வசிக்கும் குமுதாவின் தாயார் ராஜாமணிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அரூர் போலீசுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சோகம்
அப்போது குமுதா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் குமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குமுதாவின் தாயார் ராஜாமணி, அரூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு, ராணுவ வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.