ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை அருகே கோவிலில் விஷம் குடித்த அர்ச்சகர் பலியானார்.
கோவில் நிலம்
ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள மிட்டப்பள்ளி ராஜவீதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 75). இவர் மிட்டப்பள்ளியில் உள்ள திம்மராய சாமி கோவிலில் அர்ச்சகராக வேலை பார்த்து வந்தார். மேலும் அதே ஊரை சேர்ந்த 5 பேர் சுழற்சி முறையில் அர்ச்சகராக வேலை செய்து வருகிறார்கள்.
திம்மராய சாமி கோவிலுக்கு சொந்தமான 12.65 சென்ட் நிலம் அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் கோவிந்தசாமி உள்பட 6 அர்ச்சகர்களும் பரம்பரை, பரம்பரையாக விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அர்ச்சகர் தற்கொலை
இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த நிலத்தை ஆய்வு செய்து, இந்து சமய அறநிலையத்துறையில் சேர்க்க நடவடிக்கைக்கு முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோவில் மற்றும் நிலம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டின் கீழ் சென்று விடுமோ என்று நினைத்து கோவிந்தசாமி மனவேதனை அடைந்தார்.
இதனால் அவர் கடந்த 4-ந் தேதி கோவிலில் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. அவரை பக்தர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோவிந்தசாமி இறந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட அர்ச்சகர் கோவிந்தசாமி உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கோவிந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.கோவிலில் விஷம் குடித்து அர்ச்சகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.