விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 50), தொழிலாளி. இவரது மனைவி சுசிலா (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி 2 பேரும் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் மனைவி சுசிலாவை வேலைக்கு செல்லக்கூடாது என கோவிந்தன் கூறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 5-ந்தேதி கோவிந்தன் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.