வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை
சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கெங்கவல்லி
கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 45). இவருடைய மனைவி நித்யா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதற்கிடையே மனைவியை அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மருதவல்லி கிராமத்தில் விட்டு விட்டு ஊருக்கு வந்துள்ளார். மனைவிக்கு உடல்நிலை சரியாகவில்லை. திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்த வேதனையில் நடராஜ் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தாரமங்கலம்
தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி அபிலாஷா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கணவருடன் கோபித்துக் கொண்டு அபிலாஷா பெங்களூருவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பெருமாள் பெங்களூரு சென்று மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.
வீட்டுக்கு வந்த பிறகு அபிலாஷா வாந்தி எடுத்துள்ளார். அவரிடம் கேட்ட போது, தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனே அவரை ஓமலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அபிலாஷாவை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.