கந்து வட்டி கொடுமை போலீஸ்காரர் தற்கொலை

கடலூரில் கந்து வட்டி கொடுமையால் விஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-07 21:26 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லையை சேர்ந்தவர் முருகன் மகன் செல்வக்குமார் (வயது 27). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

கடந்த 1-ந் தேதி கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் நடந்து சென்ற செல்வக்குமார், திடீரென மயங்கி விழுந்தார். இவரை கடலூர் புதுநகர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விஷம் குடித்து தற்கொலை

போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப செலவுக்காக செல்வக்குமார், ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியதும், அந்த பணத்தை திருப்பி செலுத்தி விட்டதாகவும், ஆனாலும் அந்த பெண் மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வந்ததும், இதனால் மன வேதனை அடைந்த அவர், விஷம் குடித்து விட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தபோது மயங்கி விழுந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக கடலூர் 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரகோத்தமன், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று செல்வக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றார். இந்தநிலையில், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செல்வக்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டல்

இதுபற்றி கடலூர் புதுநகர் போலீசில் முருகன் புகார் அளித்தார். அதில், எனது கடைசி மகன் செல்வக்குமார் பெரியநெல்லிக் கொல்லையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி அனிதா(35) என்பவரிடம் ரூ.5 லட்சம் கடனாக வாங்கினார். அந்த பணத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அசல், வட்டியுடன் திருப்பி கொடுத்து விட்டார். கடன் தொடர்பாக செல்வக்குமார் கையெழுத்து போட்ட பத்திரத்தில் ரூ.12 லட்சம் தர வேண்டும் என்று அனிதா எழுதியுள்ளார். ரூ.12 லட்சத்தை கொடுத்து விடு, இல்லையெனில் இந்த பத்திரத்தை வைத்து உன்னுடைய வேலையை காலி செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் தன்னுடைய வேலை பறி போய் விடுமோ என்ற அச்சத்தாலும், மன உளைச்சல் ஏற்பட்டதாலும் விஷம் குடித்து செல்வக்குமார் தற்கொலை செய்து விட்டார் என கூறியிருந்தார்.

அதன்பேரில் கந்து வட்டி கேட்டு மிரட்டல், தற்கொலைக்கு தூண்டியதாக அனிதா மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்