கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லர் பழுதால் கரும்பு அரவை பாதிப்பு
அரூர்:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணி தொடங்கியது. இந்தநிலையில் ஆலையில் உள்ள பாய்லரில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் கரும்பு அரவை பணி பாதிக்கப்பட்டது. பாய்லரில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே அரவைக்காக கரும்புகளை எடுத்து வந்த வாகனங்கள் சர்க்கரை ஆலை வளாகத்தில் தேங்கி நிற்கின்றன.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், ஆலைக்கு கொண்டுவரப்பட்ட கரும்புகள் அரைக்கப்படாமல் இருப்பதால் அவற்றின் எடை மேலும் குறையும். இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு கரும்பு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாத வகையில் கூடுதல் தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாய்லரில் ஏற்பட்டுள்ள பழுதை விரைவாக சீரமைத்து கரும்பு அரவை பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.