ஏற்காடு:-
ஏற்காட்டில் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் தீடிரென நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளன.
நீர்வீழ்ச்சி
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை சுற்றிபார்க்க சேலம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள பாக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் மலைக்கோவில், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வர்.
இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. அதேசமயம் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதைகளில் 40 அடி பாலம் உள்ளிட்ட பல்வேறு வளைவுகளில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சி தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குறிப்பாக 3-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் அருவிபோல் தண்ணீர் விழுகிறது.
கடும் குளிர்
இதனால் ஏற்காட்டிற்கு வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை பார்த்தவுடன் வாகனங்களை நிறுத்தி இறங்கி அருவியை சிறிது நேரம் ரசித்தும், தங்களது செல்போன்களில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். ஒரு சிலர் தண்ணீரில் இறங்கி ஆனந்த குளியலும் போட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் தொடங்கிய மழை மாலை 5 மணி வரை நீடித்தது. இதனால் இரவில் கடும் குளிர் நிலவியது. பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.