ஆட்டோ டிரைவர் சாவில் திடீர் திருப்பம்; தொழிலாளி கைது
நாகா்கோவிலில் ஆட்டோ டிரைவர் சாவில் திடீர் திருப்பமாக தொழிலாளியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.;
நாகர்கோவில்:
நாகா்கோவிலில் ஆட்டோ டிரைவர் சாவில் திடீர் திருப்பமாக தொழிலாளியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆட்டோ டிரைவர் சாவு
நாகர்கோவில் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36), ஆட்டோ டிரைவர். இவர் சந்தையடி பகுதியை சேர்ந்த ராஜகுமாரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இதனால் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சுரேசும், ராஜகுமாரியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் 2 குழந்தைகளும் ராஜகுமாரியுடன் வசித்தனர்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதியன்று சுரேஷ் வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காதல் மனைவி பிரிந்து சென்றதால் விஷம் குடித்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது.
திடீர் திருப்பம்
மேலும் இதுகுறித்து கோட்டார் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சுரேஷின் பிரேத பரிசோதனை நேற்றுமுன்தினம் முடிவடைந்தது. அதில், சுரேஷின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் அவரை யாரோ அடித்துக் கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. பின்னர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை துரிதப்பட்டது.
விசாரணையில் ஆட்டோ டிரைவர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது சுரேசுக்கும், கோதை கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ராஜசேகர் (32) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ராஜசேகர் மதுபோதையில் சுரேஷ் வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ராஜசேகர், சுரேஷை தள்ளியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சுரேஷின் தலையில் பலத்த உள் காயம் ஏற்பட்டது.
தொழிலாளி கைது
இந்த தாக்குதல் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் சுரேஷ் மயங்கி விழுந்தது அம்பலமானது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கை தற்கொலை வழக்கில் இருந்து இந்திய தண்டனை சட்டம் 304 (2) பிரிவின் கீழ் (கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் செயல்படுதல்) வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கோட்டார் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.