தென்காசியில் கிராம மக்கள் திடீர் போராட்டம்

தென்காசியில் கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-11 18:45 GMT

தென்காசி அருகே உள்ள முத்துமாலைபுரம் கிராமத்தில் நாராயண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 14-ந்தேதி திருவிழா தொடங்க உள்ளது. இதற்காக கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அதே ஊரில் அதே பெயரில் உள்ள மற்றொரு கோவிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி ஊர்வலம் நடந்தது. அப்போது திருவிழா நடைபெற உள்ள கோவில் பகுதியில் பட்டாசு வெடித்தபோது, ஒரு பட்டாசு அந்த கோவிலின் பந்தலில் விழுந்ததால் தீவிபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் அவர்கள் மீது கூடுதல் பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சில்லரைபுரவு ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமையில் பலர் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் திடீரென புதிய பஸ் நிலையம் எதிரே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்