மதுரையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை

மதுரையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-03-23 20:46 GMT


மதுரையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெயிலின் தாக்கம்

மதுரையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு இருந்தது. இதனால் மதுரை மக்கள் மழைக்காக ஏங்கி காத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று பகலிலும் வெயில் சுட்டெரித்தது. ஆனால், மாலை 6 மணி அளவில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. 6 மணிக்கு பெய்ய தொடங்கிய இந்த மழையானது 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

இதற்கிடையே, மழை பெய்ய தொடங்கிய சில நிமிடங்களிலேயே பனிக்கட்டி போன்று ஆலங்கட்டிகள் விழுந்தன.

இதனை பார்த்த மக்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன், அந்த பனிக்கட்டிகளை கையில் சேகரித்து ரசித்தனர்.

திடீரென பெய்த பலத்த மழைக்காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.

போக்குவரத்து பாதிப்பு

குறிப்பாக மதுரை பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மாலை நேரம் என்பதால், அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

இதுபோல், மழையினால், பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது. புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மரங்கள் விழுந்தன

நேற்று பெய்த மழையின் காரணமாக, மதுரை மேலவாசல் மற்றும் திடீர்நகர் போலீஸ் நிலையம் அருகே 2 இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த திடீர்நகர் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை அகற்றினர். இதுபோல், பீ.பி.குளம் பகுதியிலும் மரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்தது. அதனையும், தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.

ஆலங்கட்டி மழை

டி.கல்லுப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென்று இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. கல்லுப்பட்டி அருகில் உள்ள நல்லமரம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் ஆலங்கட்டிகளை கையில் எடுத்து மகிழ்ந்தனர். இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்