கியாஸ் கசிவால் மீன் கடையில் திடீா் 'தீ'
நாமக்கல்லில் கியாஸ் கசிவால் மீன் கடையில் திடீரென தீப்பிடித்தது.
நாமக்கல்-சேலம் சாலையில் மீன்கடை நடத்தி வருபவர் அருண் (வயது30). இவர் நேற்று வழக்கம்போல் மீன் விற்பனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். இந்தநிலையில் பிற்பகலில் கியாஸ் தீர்ந்து விட்டது. எனவே சிலிண்டரை மாற்றி, வேறு சிலிண்டரை பொருத்தி உள்ளார். அப்போது கியாஸ் கசிவால் கடையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து வெளியேறினர்.
இது குறித்து தகவல் அறிந்த, நாமக்கல் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த விபத்தில் சிலிண்டரின் டியூப், பாத்திரம் உள்ளிட்டவை சேதம் அடைந்தன. பெரிய சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் கடையின் முன்பு ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.