வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரியில் திடீர் தீ
ஆவுடையார்கோவில் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 5 இருசக்கர வாகனங்களும் எரிந்து நாசமானது.
லாரியில் தீ
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே வீழிமங்கலம் கிராமத்திற்கு வைக்கோல் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. இப்போது லாரி மேலே சென்ற மின் கம்பிகளில் வைக்கோல் உரசியதில் திடீரென தீப்பிடித்தது.
இதையறிந்த லாரி டிரைவர் அப்பகுதியில் வீடுகள் அதிகம் உள்ளதால் வீடுகளில் தீப்பிடித்து விடும் என்ற நல்ல நோக்கத்துடன் லாரியை வேகமாக கோட்டைப்பட்டினம் சாலைக்கு ஓட்டி வந்தார். அதற்குள் லாரியின் மேலே இருந்த கயிறு தீப்பிடித்து எரிந்தது. இதில் வைக்கோல் தீயில் எரிந்தவாறு சாலையில் கொட்ட தொடங்கியது. அப்போது சாலையோரங்களில் நிறுத்தியிருந்த 5 இருசக்கர வாகனங்கள் மீதும் தீப்பிடித்து எரிந்தது.
வாகனங்கள் நாசம்
இதைப்பார்த்த அந்தவழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனங்களில் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதில் 5 இருசக்கர வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. லாரி பாதி மட்டும் எரிந்தது. இதுகுறித்து மீமிசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.