ஆழ்துளை கிணறு அமைக்க ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானியம்
மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு (2022-2023) -ம் ஆண்டில் ரூ.42 கோடி செலவில் 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்து தரப்படும் என வேளாண் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினரால் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட 115 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இடத்திற்கு ஏற்றவாறு குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி அல்லது சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளை நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள மொத்தமாக 100 சதவீத மானியத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.7 லட்சம் வரை அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கலாம்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள், வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்ட சாதி சான்று பெறவேண்டும். அரசினால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் நிறுவ வேண்டும் என்றாலோ அதற்கான கூடுதல் செலவினை சம்பந்தப்பட்ட விவசாயிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆதி திராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.