சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க மானியம் கலெக்டர் தகவல்
சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப் படும்.
இவ்வாறு அமைய உள்ள ஜவுளி பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். இத்தகைய சிறிய ஜவுளி பூங்காவின் அமைப்பு பின்வரும் உட்பிரிவுகளைக்கொண்டதாக இருக்கும்.
கட்டமைப்பு
முதலாவது நிலம், 2-வது உள் கட்டமைப்பு வசதிகள் (சாலை வசதி, சுற்றுசுவர், கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல், நீர் வினியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலைத்தொடர்பு வசதி போன்றவைகள்).
3-வது ஆய்வுக்கூடம், 4-வது வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள். உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள், எந்திரங்கள் மற்றும் தளவாடங்கள்.
திட்ட மதிப்பீடு
சிறிய ஜவுளி பூங்காவிற்கான திட்ட மதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்ட உள் கட்டமைப்ப வசதி, ஆய்வுக்கூடம் மற்றும் வடிவமைப்பு மையம் உள்ளிட்ட இனங்கள் ஆகும். ஆகவே இந்த இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும். மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெற கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 94439 43450 என்ற செல்போன் எண்ணிலும் மண்டல துணை இயக்குனர், துணிநூல் துறை, 1A-2/1, சங்ககிரி பிரதான சாலை, குகை சேலம்-6 அலுவலகத்திலும் நேரடியாக தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.