நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும்-வேளாண் விஞ்ஞானிகள்
நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், உதவி பேராசிரியர் பெரியார் ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிலக்கடலை சாகுபடி
நிலக்கடலை சாகுபடி நீடாமங்கலத்தில் வேளாண் அறிவியல் நிலையம், தமிழ்நாடு நீர் நிலவள திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நீர் நுட்ப மையம் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது.
தற்போது நிலக்கடலை சாகுபடியை 100 சதவீத மானியத்துடன் செயல்படுத்த வேளாண் அறிவியல் நிலையம் தயாராக உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விதைகள், உரங்கள், ஜிப்சம் மற்றும் நடமாடும் நீர் தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
8 வட்டார விவசாயிகள்
இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நீடாமங்கலம், மன்னார்குடி, வலங்கைமான், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கொரடாச்சேரி மற்றும் திருவாரூர் ஆகிய 8 ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறலாம். இத்திட்டம் வட்டாரத்தில் உள்ள பொதுப்பணி துறையால் பரிந்துரைக்கப்பட்ட கிராமங்களுக்கு மட்டும் பொருந்தும். மற்ற கிராமங்களுக்கு பொருந்தாது. முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்
திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் ஆதார் அட்டை நகல், சிறு குறு விவசாயிகள் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, சிட்டா அடங்கல் ஒரிஜினல், நில வரைபடம் நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.