சேலத்தில் பரிதாபம்: குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தற்கொலை

சேலத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-07 22:10 GMT

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

சேலம் தாதகாப்பட்டி ரேடியோ பார்க் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் நாமக்கல் மாவட்டத்தில் நுண்ணறிவு பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா (வயது 31). இவர்களுக்கு வித்தேஷ் (7) என்ற மகனும், நித்திஷா (3) என்ற மகளும் உள்ளனர். இதில் வித்தேஷ் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று காலை வழக்கம் போல் மணிகண்டன் பணிக்கு சென்றார். அவருடைய மகன் வித்தேஷ் பள்ளிக்கு சென்றுவிட்டான். வீட்டில் அனிதாவும், நித்திஷாவும் மட்டும் இருந்துள்ளனர். இந்த நிலையில் பிற்பகல் 2.45 மணி அளவில் மணிகண்டன் பணி முடிவடைந்து வீட்டுக்கு வந்தார்.

தற்கொலை

வீட்டில் உள்ள அறையின் கதவு உள்தாழிட்டு இருந்தது. இதனால் மணிகண்டன் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு அனிதா பிணமாக தொங்கினார். மேலும் அதே அறையில் வாயில் நுரையுடன் மகள் நித்திஷா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் உறவினர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டைரியில் எழுதியது என்ன?

இதற்கிடையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அனிதா டைரியில் பென்சிலால் எழுதி உள்ளார். அந்த டைரி போலீசாரிடம் சிக்கியது. அதில் 'என் மனதில் இருப்பதை நான் சொல்கிறேன். எனக்கு வாழ பயம் வந்துவிட்டது. அதனால் என் குழந்தை, நான் இருவரும் இறக்கிறோம்' என்கிற ரீதியில் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்