அரசின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் தலைமையில் நடந்தது.
ஆய்வு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசின் முன்னோடித் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் (நிலச்சீர்த்திருத்தம்) டாக்டர் பீலா ராஜேஷ் தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலாராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
விரைந்து முடிக்க உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்டங்களில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அம்ரித் சர்வார், நமக்கு நாமே திட்டம்,
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள பெருக்கு நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்களில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நேரில் ஆய்வு
தொடர்ந்து, கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த, 2021-22-ம் ஆண்டிற்கான கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80.55 லட்சம் மதிப்பீட்டில் பைரவா தெரு, பாண்டியன் நகர் மற்றும் நேதாஜி நகர் இணைக்கும் வகையில் தார்சாலை, கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகள். பாப்பாரப்பட்டி பகுதியில் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் தாசகவுண்டன்பட்டி ஏரியை ரூ.79 லட்சம் மதிப்பில் புனரமைத்து, கரைகளை பலப்படுத்தி, ஏரியின் பக்கவாட்டில் கால்வாய் அமைத்தல், 719 மீட்டர் நீளம் கிரில் கைப்பிடி அமைத்தல், 25 மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்தார். பின்னர் பர்கூர் ஊராட்சி ஒன்றியம், பெலவர்த்தி ஊராட்சியில், நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, கிருஷ்ணகிரி மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குமரேசன், நில அளவை உதவி இயக்குனர் சேகரன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார் உள்பட கலந்து கொண்டனர்.