மாணவர்கள் `திடீர்' சாலை மறியல்

நெல்லை டவுன் கல்லணை பள்ளிக்கூடம் முன்பு மாணவர்கள் `திடீர்' சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-24 19:47 GMT

நெல்லை டவுன் கல்லணை பள்ளிக்கூடம் முன்பு மாணவர்கள் `திடீர்' சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடக்கப்பள்ளி

நெல்லை டவுன் பெருமாள் கீழ ரத வீதியில் கல்லணை மாநகராட்சி தொடக்க பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 400 மாணவ-மாணவிகள் படித்தனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் சேர்ந்துள்ளனர்.

இதனால் பள்ளிக்கூடத்தில் இடநெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 230 மாணவ-மாணவிகளை அந்த பகுதியில் உள்ள பாரதியார் உயர்நிலை பள்ளிக்கூடத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர். மேலும் கல்லணை பள்ளிக்கூடத்தில் சத்துணவு தயார் செய்யப்பட்டு அங்கிருந்து பாரதியார் பள்ளிக்கூடத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.

மாணவர்கள் போராட்டம்

இதற்கு மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரதியார் உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான அளவுக்கு அடிப்படை வசதிகள் உள்ளது. இந்தநிலையில் கல்லணை பள்ளிக்கூடத்தில் உள்ள மாணவர்கள் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டால் அவர்களுக்கு கழிவறை உள்ளிட்ட வசதிகள் போதுமானதாக இருக்காது என கூறி கடந்த 21-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாநகராட்சி அதிகாரிகள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 நாட்களில் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டம் நடத்தி, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 2 நாட்களுக்கு பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்தநிலையில் கல்லணை தொடக்க பள்ளிக்கூடத்தில் போதிய இடவசதி இல்லாததை கண்டித்து நேற்று அங்கு படிக்கும் மாணவ -மாணவிகள் பள்ளிக்கூடத்தின் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சில அமைப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த `திடீர்' சாலைமறியல் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் பைஜூ நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் இளவரசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, வருகிற திங்கட்கிழமைக்குள் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டம் நடத்தி பள்ளியில் போதிய இடவசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்