வாழ்க்கை என்பது வெற்றிக்கும், தோல்விக்கும் இடையேயான பயணம் என்பதை மாணவர்கள் உணரவேண்டும் - டிடிவி தினகரன்
நீட் தேர்வில் தோல்வி காரணமாக மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
நீட் தேர்வில் தோல்வி காரணமாக சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்திருப்பது வேதனையளிக்கிறது.
ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து என போலியான வாக்குறுதி அளித்த திமுக, அதற்கான வலுவான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து வருகிறது. இனியும் நீட் தேர்வு ரத்து என மாணவர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, நீட் தேர்விலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற அதிக எம்.பி.க்களை வைத்திருக்கும் தி.மு.க. உண்மையாக முயற்சிக்க வேண்டும்.
வாழ்க்கை என்பது வெற்றிக்கும், தோல்விக்கும் இடையேயான பயணம் என்பதை மாணவர்கள் உணரவேண்டும். தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொள்வது எதற்கும் தீர்வாகாது. அதே நேரத்தில், தோல்வியை எதிர்கொண்டால் மட்டுமே வெற்றிப் படிகளைச் சுலபமாக அணுகமுடியும் என்பதையும் மாணவர்கள் மனதில்கொள்ள வேண்டும்.
உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதுடன், அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.