மாணவர்கள் கல்வியோடு திறன் மேம்பாட்டு பயிற்சியும் பெற வேண்டும்

மாணவர்கள் கல்வியோடு திறன் மேம்பாட்டு பயிற்சியும் பெற வேண்டும் என அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அறிவுறுத்தினார்

Update: 2023-10-22 18:45 GMT

காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் என்ஜினீயரிங் கல்லூரியில் ஜெயராம் திறன் மேம்பாட்டு மையம் சார்பில் சான்றிதழ் டிப்ளமோ படித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா தலைமை தாங்கினார். ஸ்ரீராஜராஜன் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் வடிவாம்பார் வரவேற்றார். அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:- இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் பிற பின்தங்கிய மாநிலங்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை தமிழ்நாட்டுக்குள் மத்திய அரசு புகுத்தியுள்ளது. அந்த வகையில் நீட் தேர்வுக்கு எதிராக தொடக்க நிலையிலிருந்தே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக 10 லட்சம் மாணவர்கள் பொதுமக்களிடம் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி அறிவோடு கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியினையும் மாணவர்கள் பெற வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ராம் கணேஷ் பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.

விழாவில் காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை, காரைக்குடி தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன், கனரா வங்கி துணை பொது மேலாளர் பாபு, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர். ஆனந்த், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப.சின்னத்துரை, அமராவதி புதூர் ஊராட்சி தலைவர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்