மாணவிகள் திறமையை வளர்த்து வாழ்வை வளமாக்க வேண்டும்
அரசின் திட்டங்களை பயன்படுத்தி மாணவிகள் திறமையை வளர்த்து வாழ்வை வளமாக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
அரசின் திட்டங்களை பயன்படுத்தி மாணவிகள் திறமையை வளர்த்து வாழ்வை வளமாக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
புதுமைப்பெண் திட்டம்
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 999 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட பெட்டக பை மற்றும் வங்கி பற்று அட்டை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று பொறுப்பேற்று கொண்ட கலெக்டர் ஜெயசீலன் முதல் நிகழ்ச்சியாக இதில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சிறப்பு பண்புகள் உண்டு. ஒருவருக்கு இருக்கும் திறமை மற்றவருக்கும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வையார் தெரிவித்ததை போல தூக்கணாங்குருவி கூட்டினை திறமை வாய்ந்த என்ஜினீயரால் கட்ட முடியாது. கரையான் புற்றை போல நம்மால் அமைக்க முடியாது.
அரசின் திட்டங்கள்
இத்தனைக்கும் அவை மிக சிறிய உயிரினம் தான். அதேபோல மாணவர்கள் தங்களது தனி திறமைகளை கண்டறிந்து தொடர்ந்து உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி பயில வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு செயல்படுத்தி வரும் இம்மாதிரியான சிறப்பான திட்டங்களை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் உயர்கல்வி பெற்று தங்களது தனி திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்வை வளப்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், யூனியன் தலைவர்கள் சுமதி ராஜசேகர், நிர்மலா கடற்கரை ராஜ், சசிகலா, விருதுநகர் நகரசபை தலைவர் மாதவன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, சமூக நலத்துறை அலுவலர் இந்திரா, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலர் ராஜம், முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.