கழிவுநீரில் இறங்கி பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள்

சத்துவாச்சாரியை சேர்ந்த மாணவ மாணவிகள் கழிவுநீரில் இறங்கி பள்ளிக்கு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே தற்காலிக பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-08 18:50 GMT

கழிவுநீர்

சத்துவாச்சாரி நேதாஜி நகர், காந்தி நகர், குறிஞ்சி நகர் மற்றும் மந்தைவெளி பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் கல்வி கற்று வருகின்றனர். பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முன்பு பாலாற்றில் ஓடும் கழிவுநீரை கடந்து செல்ல சிமெண்டு குழாய்கள் அமைத்து அதன்மேல் மண் போடப்பட்டு தற்காலிக பாதை அமைக்கப்பட்டது.

இதன் வழியாக மாணவ-மாணவிகள் கழிவுநீர் கால்வாயை கடந்து சென்றனர். இந்த பாதையின் வழியாக பாலாற்றை கடந்து சென்றால், வி.ஐ.டி. பல்கலைக்கழகம், காட்பாடி பகுதிகளுக்கு மிக விரைவில் செல்லலாம். இதனால் ஏராளமான பொதுமக்கள் இந்த பாதையை பயன்படுத்தி வந்தனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிமெண்டு குழாய்களை மணல் மூடிவிட்டது. இதனால் கழிவுநீர் வேறு பாதை வழியாக செல்கிறது. இதையடுத்து மாணவர்கள் ஆற்றினை கடக்க கழிவுநீரில் வேறும் காலுடன் நடந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும் காங்கேயநல்லூரில் இருந்து பாலாற்றை கடந்து தண்ணீர் பிடிக்க செல்லும் பொதுமக்களும் கழிவுநீரில் நடக்க வேண்டியுள்ளது.

பாலாற்றில் தரைப்பாலம் அமைக்கும் திட்டம் தள்ளிப்போவதால் மாணவ-மாணவிகளின் நலன் கருதி சேதம் அடையாமல் இருக்கும் சிமெண்டு குழாய்களை கழிவுநீர் செல்லும் வழியில் மாற்றி அமைத்து மணல் கொட்டி பாதை ஏற்படுத்தி கொடுக்க மாநகராட்சி அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்