கோடைவிடுமுறையை விளையாட்டு-நீச்சல் பயிற்சி மூலம் கொண்டாடும் மாணவர்கள்
கோடைவிடுமுறையை விளையாட்டு-நீச்சல் பயிற்சி மூலம் கொண்டாடும் மாணவர்கள்
திருவாரூரில் சுட்டெரித்து வரும் வெயிலிலும் விளையாட்டு மற்றும் நீச்சல் பயிற்சி மூலம் கோடைவிடுமுறையை மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கோடை விடுமுறை
தமிழகத்தில் பள்ளிகளில் பொதுத்தேர்வு, ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் வெயிலின் தாக்கமும் அதிகளவில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், கோடைவிடுமுறையில் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்கவும் பலர் தற்போது நீச்சல் கற்றுக்கொள்வதற்காக நீர் நிலைகளை தேடி செல்கின்றனர்.
கோடைகாலத்தில் கிராமப்புறங்களில் ஏரிகள், குளங்கள், கிணறுகள் போன்றவற்றில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சர்வ சாதாரணமாக நீச்சல் அடித்து விளையாடுவதை இப்போதும் பார்க்கலாம். அவ்வாறு செய்வது அவர்களுக்கு பழகிப்போன ஒரு செயல்.
மேலும் அங்குள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீர் தேங்காமல் சென்று கொண்டே இருக்கும். நீரோட்டம் உள்ள ஒரு பகுதியில் நாம் குளிக்கும் போது அது உடலுக்கு ஆரோக்கியமானது. இது கிராமங்களுக்கு மட்டுமே பொருந்தும். நகரங்களில் அதே போன்ற நீர்நிலைகள் இருப்பதில்லை.
நீச்சல் பயிற்சி
அப்படி இருந்தாலும் நகரவாசிகள் அதில் சென்று குளிக்க முடிவதில்லை. இதனால் நகரவாசிகள் சுற்றுலா என்ற பெயரில் நீர்நிலைகளுக்கு செல்வார்கள். அப்படி இல்லையெனில் நீச்சல் குளங்களுக்கு தங்களது குழந்தைகளை அழைத்து செல்வார்கள். அதன்படி வெயிலின் வெப்பத்தில் இருந்து காத்து கொள்ளவும், கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் பொழுதை கழிக்கவும் மாணவ-மாணவிகள் விளையாட்டு மற்றும் நீச்சல் பயிற்சிகளில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நீச்சல் குளம் உள்ளது. இதில் வழக்கமாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுவது உண்டு. இதேபோல டோக்கன் கட்டணம் செலுத்தி நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதியும் உண்டு. இதனை சிறுவர், சிறுமிகள், பெண்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
பல்வேறு விளையாட்டிலும் இளைஞர்கள் ஆர்வம்
தற்போது கோடைகால பயிற்சி முகாமில் நீச்சல் பயிற்சியும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயிற்சி நடைபெறுகிறது. இதில் சிறுவர், சிறுமிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் இருக்கிற நிலையில் அவர்களுக்கு இதமாக இந்த பயிற்சி அமைந்துள்ளது.
இதனால் அவர்களும் ஆர்வமாக பங்கேற்கின்றனர். பெற்றோரும் அவர்களை அழைத்து வந்து நீச்சல் குளத்தின் வளாகத்தில் அமர்ந்திருக்கின்றனர். தங்களது குழந்தைகள் நீச்சல் பயிற்சி பெறுவதை அவர்களும் கண்டு மகிழ்கின்றனர். குறைந்தது 1 மணி நேர பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக நீச்சல் பயிற்சியாளர்கள் சிறுவர், சிறுமிகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து வருகின்றனர். இதேபோல் பள்ளி, கல்லூரி விளையாட்டு மைதானங்கள், மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் இளைஞா்கள் கிரிக்கெட், வாலிபால், கூடைபந்து உள்ளிட்ட விளையாட்டுகளையும் விளையாடுகின்றனர்.