மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பு போன்ற சில படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2½ லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நடப்பாண்டில் புதுப்பித்தலை இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம். இதில் இடர்ப்பாடு ஏதாவது ஏற்பட்டால் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார்எண் நகலுடன் அணுகலாம்.
கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு வருகிற 18-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் நவம்பர் 18-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை அல்லது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.