மாணவர்களுக்கு தெலுங்கு, இந்தி மொழிகளில் வினாத்தாள் வந்ததால் குழப்பம்

மாணவர்களுக்கு தெலுங்கு, இந்தி மொழிகளில் வினாத்தாள் வந்ததால் குழப்பம்

Update: 2022-08-04 18:09 GMT

மத்திய பல்கலைக்கழக நுைழவு தேர்வில் தமிழ் மொழியை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு தெலுங்கு, இந்தி மொழிகளில் வினாத்தாள் வந்ததால் குழப்பம் ஏற்பட்டது. சர்வர் கோளாறால் ஒரு மையத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

நுழைவு தேர்வு

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்காக 259 நகரங்களில் 489 தேர்வு மையங்களில் நுழைவு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு நேற்று தொடங்கி 10 நாட்களுக்கு நடக்கிறது. திருவாரூர் அருகே நீலக்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவு தேர்வு நேற்று தொடங்கியது.

இதில் சேருவதற்காக 657 மாணவ-மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். நேற்று காலை 202 மாணவர்களும், மாலை 201 மாணவர்களும் தேர்வு எழுத வந்தனர்.

இந்த நுழைவு தேர்வு மொத்தம் 13 மொழிகளில் நடைபெறுகிறது. இதில் ஏதாவது ஒரு மொழியை தேர்ந்தெடுத்து மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்கிற நிலையில் இந்த ஆண்டு முதன் முதலாக தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் குழப்பம்

அதே நேரத்தில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத தமிழ் மொழியில் வினாத்தாளை தேர்ந்தெடுத்திருந்த மாணவர்களுக்கு மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மாற்று மொழிகளில் வினாத்தாள் வந்தது. அதேபோன்று ஹோம் சயின்ஸ் உள்ளிட்ட சில படிப்புகளுக்கு வினாத்தாள் பதிவிறக்கம் ஆகவில்லை.

இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். மேலும் மொழி மாறி வினாத்தாள் வந்ததால் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதாமல் வெளியில் செல்லும் நிலை ஏற்பட்டது

சர்வர் கோளாறால் தேர்வு ரத்து

மதியம் 3 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு சர்வர் கோளாறு காரணமாக மாலை 5.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கி 8.30 மணிக்கு நிறைவடைந்தது. இதனால் வெளியில் காத்திருந்த பெற்றோர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதுமட்டுமின்றி திருவாரூர் மாவட்டம் அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவு தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அங்கு சர்வர் கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மறு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் பாதிப்பு

குறிப்பாக இளநிலை தமிழ் படிப்பிற்கான வினாத்தாள் மட்டும் தமிழில் வந்துள்ளதாகவும், மற்ற பாடப்பிரிவுகளுக்கு தமிழ் மொழி வினாத்தாள் தேர்வு செய்தவர்களுக்கு மாற்று மொழிகளில் வினாத்தாள் வந்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சர்வர் கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டதால் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் பாதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்