தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ெதரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு இந்த 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பெறப்படுகிறது. இதற்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) 18-ந்தேதி வரை www.rte.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.