கடல் அலையில் சிக்கி மாணவர் உயிரிழப்பு: 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் தகவல்

கடல் அலையில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார். இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-08-31 09:12 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் வட்டம் நெரும்பூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 16 மாணவர்கள் கடந்த 27-ந்தேதி அணுபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கு சென்றனர்.

போட்டி முடிவடைந்து அங்கிருந்து புறப்பட்டு பஸ் மூலம் நெரும்பூர் செல்லும் வழியில் கல்பாக்கம் கடலில் மாணவர்கள் குளிக்க சென்றனர். அப்போது 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் மோகன், ராட்சத அலையில் சிக்கி மாயமானார். 28-ந்தேதி மாலை மெய்யூர் குப்பம் மீனவர் பகுதி அருகில் உள்ள கடலில் மாணவர் உடல் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கு காரணமான சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் ஞானசேகரனை பணியிடை நீக்கம் செய்தும், பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியை விஜயாவை பணியில் இருந்து விடுவித்தும் உத்தரவிடப்பட்டது. மேலும், பள்ளி தலைமையாசிரியையிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதி வழங்கிட முதல் தகவல் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை பெற்று உரிய முன்மொழிவுகள் அனுப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் நிவராணம் வழங்கிட ஆதிதிராவிடர் நல இயக்குனருக்கு முன்மொழிவு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்