அரியலூரில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் மாணவர் பலி - 30 பேர் காயம்
அரியலூரில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூர் செல்வதற்கு தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டது. பஸ் செந்துறை வழியாக ராயபுரம் என்ற இடத்தில் செல்லும் போது சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 30 பேர் காயமடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பஸ்சில் சிக்கியிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் கல்லூரி மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 30 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.