கிருஷ்ணகிரி:
அடிப்படை வசதிகள் கேட்டு கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா ஜம்புகுட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பழனி ஆண்டவர் நகரை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பள்ளி குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு, மின்சாரம், பட்டா, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கேட்டு கடந்த, 2005-ம் ஆண்டு முதல் அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகிறோம். இது குறித்து கலெக்டர் மற்றும் அரசு அலுவலர்கள், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி சென்னை தலைமை செயலகத்துக்கே சென்று மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பேச்சுவார்த்தை
இந்த பகுதியில் மின்சாரம் இல்லாததால், இருளில் சென்ற சிறுவன், பாம்பு கடித்து இறந்துள்ளான். அதன்பின்னரும் எங்கள் மீது யாரும் கருணை காட்டவில்லை. எங்கள பகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டும், அதிகாரிகள் மெத்தன போக்கை கண்டித்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மாவட்ட தலைமையிடத்து துணை தாசில்தார் சகாதேவன் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னும் ஒரு மாதத்திற்குள், உங்கள் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என அவர் உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பள்ளி குழந்தைகளுடன் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.