ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு:நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-26 18:45 GMT

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது, சூரத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல்காந்தியை குற்றவாளியாக அறிவித்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அறவழி போராட்டம்

தமிழகத்தில் உள்ள தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு சத்தியாகிரக அறவழி போராட்டம் நடத்தப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார். அதன்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலை காந்தி சிலை முன்பு நேற்று அறவழி போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வீ.பி.வீரப்பன், பி.எஸ்.டி.செல்வராஜ், பாச்சல் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் மெய்ஞானமூர்த்தி, பொறியாளர் அணி மாவட்ட தலைவர் பொன்முடி, நாமக்கல் நகர காங்கிரஸ் தலைவர் மோகன், மாணவர் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் பாலாஜி மற்றும் வட்டார தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்