குழந்தை திருமணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை

கரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update:2022-07-31 00:09 IST

பயிற்சி முகாம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மனித கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-வேலை பார்க்கும் இடத்தில் பாலியல் தொந்தரவுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு வகையான தாக்குதல்களை தடுப்பது நமது கடமையாகும். அதை தடுப்பதற்கு நாம் பல்வேறு வகையிலான அமைப்புகளை உருவாக்கி பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

600-க்கும் மேற்பட்ட புகார்கள்

கரூர் மாவட்டத்தில் புதிய முயற்சியாக வாட்ஸ்-அப் எண் 8903331098 உருவாக்கப்பட்டு அதன் மூலம் குழந்தைகளின் புகார்கள் பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் 600-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்காக நமக்கு காவல்துறையும், நீதித்துறையும் பக்கபலமாக உள்ளது. குழந்தை திருமணம் செய்பவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விழிப்புணர்வு

ஒரே கிராமத்தில் அதிக அளவிலான இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் கிராமங்களுக்கு நேரில் சென்று பள்ளிக்கூட மணியடிச்சாச்சு என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் தொடர்ந்து படிப்பதற்கான பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து உள்ளோம். வருகிற திங்கட்கிழமை முதல் பள்ளிக்கு செல்ல உள்ளார்கள். இதை அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களே உறுதிமொழி மூலம் தெரிவித்து உள்ளார்கள். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை குழந்தை கடத்தல், பெண் குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைகளுக்கு பல்வேறு வகையான பாதிப்புகளை தடுத்திடும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி தவறு நடைபெறும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொண்டு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கரூர் மாவட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான மாவட்டம் என்பதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்