போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

போதைப்பொருட்கள் பறிமுதலுக்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2024-03-11 16:23 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிராமத்தில் இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.110 கோடி மதிப்புள்ள 100 கிலோ ஹாசிஷ் போதைப்பொருளும், ரூ.1 கோடி மதிப்புள்ள 876 கிலோ கஞ்சாவும் சுங்கத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருட்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக போதைப்பொருட்கள் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்படுவது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது.

கடந்த சில வாரங்களில் மட்டும் 5 முறைக்கு மேல் கடத்தல் போதைப்பொருள் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளும் இலங்கைக்கு கடத்தப்படவிருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம், தமிழ்நாடு உலக அளவிலான போதைப்பொருட்கள் கடத்தலின் மையமாக மாறி வருகிறது என்பது உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களில், சில நாட்களுக்கு முன் சென்னை அம்பத்தூரில் பறிமுதல் செய்யப்பட்ட சிறிய அளவிலான போதைப் பொருளைத் தவிர மீதமுள்ள அனைத்து போதைப் பொருள்களும் மத்திய அமைப்பினரால் தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் நடமாட்டம் குறித்து தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் எதுவும் தெரியவில்லை அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இன்னும் கூட போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது இது வரை கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் தான் உள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறும் போதைப் பொருள்கள் கடத்தலுக்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். தங்கள் மீதான பழியை துடைப்பதற்காகவாவது தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்