பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை; கமிஷனர் காமினி அறிவுறுத்தல்

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் காமினி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2023-10-26 20:04 GMT

குற்றத்தடுப்பு கலந்தாய்வுக்கூட்டம்

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் செப்டம்பர் மாதத்துக்கான மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வுக்கூட்டம் கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. போலீஸ் கமிஷனர் காமினி தலைமை தாங்கினார். துணை கமிஷனர்கள் ரவிச்சந்திரன், செல்வகுமார், ஆயுதப்படை கூடுதல் போலீஸ் கமிஷனர் விக்னேஷ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது கமிஷனர் காமினி பேசியதாவது:-

பெண்களை வைத்து விபசாரம்

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதை மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறாத வகையில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஸ்பா என்ற பெயரில் இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துபவர்கள் மீதும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

போலீஸ் நிலையங்களில் பகல் மற்றும் இரவு ரோந்து அலுவல்களை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ள திருட்டு வழக்குகளை துரிதமாக புலன்விசாரணை செய்து, வழக்கு சொத்துக்களை மீட்க வேண்டும். கோர்ட்டில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை உரிய காலத்தில் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

1,158 மனுக்களுக்கு தீர்வு

மேலும் திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் பெட்டிசன் மேளா நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் காமினி மேற்பார்வையில் நடந்தது. இதில் 25 மனுக்களில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை செய்து, அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும், கடந்த 10 மாதங்களில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் இணையவழியில் கொடுக்கப்பட்ட 1,194 மனுக்களில், 1,158 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த 1,902 மனுக்களில் 1,536 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது என்று கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்