பள்ளி குழந்தைகள், வாகனங்களில் செல்பவர்களை துரத்தும் தெரு நாய்கள்

பள்ளி குழந்தைகள், வாகனங்களில் செல்பவர்களை தெரு நாய்கள் துரத்துகின்றன.

Update: 2023-08-08 18:53 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு குமரன் நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக பள்ளி செல்லும் குழந்தைகளையும், வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி சென்று கடிக்க முயற்சிக்கின்றன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். ேமலும் நாய்கள் துரத்தியதால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்த சம்பவமும் நடந்துள்ளது. மேலும் முதியவர்கள் அந்த வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் தனியாக செல்வதை தவிர்த்து சிலர் ஒன்று சேர்ந்து கையில் தடியுடன் சென்று வருகின்றனர். இதேபோல் நகரில் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவற்றில் சில நாய்கள் கழுத்து, கால், உடல் உள்ளிட்ட இடங்களில் ஆறாத புண்ணுடன் மிகவும் மோசமாக நோய் தொற்று பரவும் அபாயத்தில் அலைந்து திரிகின்றன. எனவே தெரு நாய்களை அப்புறப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்