பல்லடத்தில் கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது.அப்போது கூட்டமைப்பு செயலாளர் ஜெமினி சண்முகம் கூறுகையில் "கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினர் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக தொழில் துறை மின்வாரிய கூட்டமைப்பினர் சார்பாக ரூ.380ஆக இருந்த நிலை கட்டணத்தை ரூ.550 ஆக உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும் எனவும், பீக்ஹவர் நேர கட்டணம் மற்றும் சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந்தேதி காரணம்பேட்டை பகுதியில் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காததால் தமிழக தொழில் துறை மின்வாரிய கூட்டமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று ஒருநாள் மட்டும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தால் இன்று ஒருநாள் மட்டும் அரசுக்கு ரூ.1000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். மேலும் அடுத்த கட்ட போராட்டமாக வருகின்ற 9.10.2023 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் கோரிக்கை மனு அளிப்பது, வருகிற 16.10.2023 அன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்றார். அப்போது ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.